நீ மரணமற்றவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உன் சிந்தையற்ற சிந்தையைப் பாதுகாப்பான இருப்பிடமாகக் கொண்டு நாசச் செயல்கள் புரிய முடியுமென்று தெரிந்திருக்கிறது.
நான் சார்வாகனின் சிந்தைக்குள்தான் இருந்தேன். அங்கேயேதான் கருவூர்ச் சித்தரும் இருந்தார். எனக்குப் புலப்படாத அந்த இன்னொரு சிந்தை அவருக்கு மட்டும் புலப்பட்டிருக்குமா?
பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே தெரியவில்லை.
தளவாடப் பண்டாரக் கட்டடம் நூற்று எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக இருந்தது என்றெல்லாம் நீ விட்ட கதையையும் மறந்தாயா?
எல்லோரும் நெற்றி நிறைத்த நீரணிந்திருக்கிறார்கள். எனக்கு அவ்வழக்கமில்லை. எதிலும் ஒரு நியாயம் வேண்டும். இந்தச் சனம் என்னை எப்படித் தங்களில் ஒருவனாகக் காணும்?
நாளை ஐப்பசி சதயம். அருமொழியின் பிறந்த நாள். நாடே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும். நாமறியாத ஒரு கூட்டம் அந்நாளைத் துக்க நாளாக்கியிருந்தால் மக்கள் தாங்குவார்களா?
நாம் ஒரு பரிசோதனை முயற்சியில் தோல்வியடைந்திருக்கிறோம். நாம் எண்ணியது நிறைவேறியிருந்தால் இந்நேரம் தஞ்சப்புரி நிலைகுலைந்திருக்கும். அருமொழி சித்தம் கலங்கி நின்றிருப்பான்.